ADMK 52 : எம்ஜிஆரும்.. அதிமுகவின் வளர்ச்சியும்…

ADMK - MGR - JAYALALITHA

தமிழகத்தில் இரு பெரும் பிரதான கட்சிகளில் ஒன்றாக திகழ்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அஇஅதிமுக – ADMK). இந்த கட்சி தொடங்கி இன்று தனது 52ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 30 ஆண்டுகாலம் ஆட்சியில் பொறுப்பேற்றுள்ளது. பிரதமர்களை உருவாகியுள்ளது. முதல் திராவிட மத்திய மந்திரிகளை உருவாக்கியது என்று பல பெருமைகள் அதிமுகவிற்கு உள்ளது.

அதிமுக தொடங்கியதை பற்றி கூற வேண்டும் என்றால், அதில் அரசியல் எதிர் நிலைப்பாட்டாளர்களாக உள்ள திமுகவை பற்றியும் கூறித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அதிமுக கட்சி தலைவர் எம்ஜிஆரே ஆரம்பத்தில் திமுக கட்சியை சேர்ந்தவர் தான். திமுக கொள்கைகளை, கொடியை தனது திரைப்படங்களில் பிரபலப்படுத்தியவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து, தேர்தல் அரசியலில் களம் காண செப்டம்பர் 17, 1949இல் சி.என்.அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) திமுகவை தோற்றுவித்தார். அதன் பிறகு பல்வேறு தடைகளை தாண்டி, 1967இல் திமுக கூட்டணி வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானார்.  திமுக ஆட்சியை பிடிப்பதற்கு எம்ஜிஆரின் திரைத்துறை பிரபலமும், அவரது தீவிர பிரச்சாரமும், திரைப்படங்களில் வெளிப்பட்ட திராவிட கொள்கைகளும் முக்கிய பங்காற்றின என்பதும்  குறிப்பிடத்தக்கது.

அதிமுகவினரை பிரிக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர்! – எஸ்.பி வேலுமணி பேட்டி

பின்னர், 1969 பிப்ரவரி 3ஆம் தேதி அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக பொறுப்பில்  இருந்த போதே உயிரிழந்தார். அறிஞர் அண்ணா மறைவுக்கு பின்னர் , கலைஞர் கருணாநிதி திமுக கட்சி தலைவராகவும், திமுக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தமிழக முதல்வராகவும் கலைஞர் கருணாநிதி முதன் முதலாக தமிழக முதலமைச்சரானார்.

முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும்.  திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த எம்ஜிஆருக்கும் இடையே கட்சி ரீதியில் கருத்து வேறுபாடு எழவே, 1972 அக்டோபர் 10இல் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட எம்ஜிஆர் 1972, அக்டோபர் 14ஆம் தேதி திமுகவில் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் தனது ஆதரவாளர்களுடன், தனிக்கட்சி தொடங்க ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், தனது ஆதரவாளர் அனகாபத்தூர் ராமலிங்கம் அதிமுக எனும் பெயரில் கட்சி ஒன்றை பதிவு செய்து வைத்து இருந்தார். அதில் தன்னை ஒரு கட்சி தொண்டனாக இணைத்துக்கொண்டார் எம்ஜிஆர்.

பின்னர் அதிமுக தலைவரான எம்ஜிஆர் , அதிமுக எனும் கட்சி பெயரை அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் – அஇஅதிமுக என மாற்றினார். இதற்கு முதலில் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், எம்ஜிஆர் மீதான பற்று காரணமாக அஇஅதிமுக பெயரை ஏற்றுக்கொண்டனர்.

1972இல் தேர்தல் ஆணையம் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கினர். அதிமுக கொடியாக இருக்கும் கருப்பு சிவப்பு இடையில் அண்ணா கட்டளையிட்ட புகைப்படம், இரட்டை இலை கொண்ட இந்த கொடியை நடிகர் பாண்டு வடிவமைத்து இருந்தார் என்பது குறிப்பிடக்கத்து.

கட்சி அங்கீகாரம் , சின்னம் பெற்று அதிமுக சந்தித்த முதல் தேர்தல் 1973 திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்.  திண்டுக்கல் திமுக எம்பி உயிரிழந்ததை அடுத்து, அங்கு தேர்தல்வரவே, முதல் முறையாக அதிமுக சார்பாக மாயத்தேவர் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதன் பிறகு 1977 நடைபெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் அதிமுக போட்டியிட்டு , வெற்றிபெற்று  1977, ஜூன் 30ஆம் தேதி முதன் முறையாக தமிழக முதல்வரானார் எம்ஜிஆர். அதன் பிறகு 1980 இல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி தமிழகத்தில் ஆட்சியை கலைத்தார். தமிழகம் மட்டுமல்லாது மற்ற சில மாநிலங்களின் ஆட்சியையும் கலைத்தார்.

ஆனாலும், 1980 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் எம்ஜிஆர். 1980க்கு பிறகு, 1984இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் சமயத்தில் எம்ஜிஆர் உடல் நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில் கூட எந்தவித பிரச்சாரமும் செய்யாமல் 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றி இருந்தார் எம்.ஜி.ஆர்.

தான் இருக்கும் வரை முதல்வராகவே தொடர்ந்து, அதிமுகவை அரியணையில் இருந்து இறங்கவிடாமல் பார்த்துக்கொண்டார் எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் எம்ஜிஆர். தமிழக அரசு இவ்வளவு பெரிய இடத்தை அதிமுகவுக்கு அமைத்து கொடுத்த எம்ஜிஆர் டிசம்பர் 24 , 1987இல் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

அதன் பிறகு எம்ஜிஆர் மனைவி ஜானகி அணி, ஜெயலலிதா அணி பிரிந்து , இரட்டை இலை சின்னம் முதன் முதலாக முடக்கப்பட்டபோது,  சரிவில் இருந்த அதிமுகவை மீட்டு, 1991ஆம் ஆண்டு எம்ஜிஆர் போல மீண்டும் அதிமுகவை அரியணையில் ஏற்றி  முதன் முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மீண்டும் இவ்வாறான வரலாற்று வெற்றிக்கு அதிமுக ஏங்கி கிடக்கிறது. அதனை தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிகழ்த்தி காட்டுவாரா என்பதை அடுத்தடுத்த தேர்தலில் காணலாம்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்