பெற்றோர்கள் கவனத்திற்கு..! தனியார் பள்ளிகளில் இலவச கல்வி… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…
RTE : தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
கல்வியை அடிப்படை உரிமையாக கொண்டுள்ள நமது நாட்டில் அனைத்து குழந்தைகளும் அரசு – தனியார் என எந்த பாகுபாடுமின்றி கல்வியை இலவசமாக பெற வேண்டும் என்ற நோக்கில் கல்வி உரிமை சட்டம் (RTE – Right to Education Act) கடந்த ஆகஸ்ட் 4, 2009இல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. 2013ஆம் ஆண்டு இந்த சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.
இந்த சட்டத்தின் கீழ், தமிழகத்தில் 6 முதல் 14 வயது வரையில் (1 முதல் 8ஆம் வகுப்பு வரை) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை எந்தவித கல்வி கட்டணமும் இன்றி பள்ளியில் சேர்க்கபடுவர். இதற்காக rteadmission.tnschools.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். இதற்கான கட்டணத்தை மாநில அரசு, தனியார் பள்ளிகளுக்கு அளிக்கும்.
இன்று (ஏப்ரல் 22) முதல் மே மாதம் 20ஆம் தேதி வரையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான தனியார் பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோர்கள் உரிய ஆவணங்கள் கொண்டு விண்ணப்பித்த உடன், அவர்கள் மொபைல் எண்ணிற்கு SMS குறுஞ்செய்தி வரும். பள்ளிகளுக்கு அதிக அளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டால் இறுதியில் குலுக்கல் அல்லது முன்னுரிமை முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
RTE மாணவர் சேர்க்கை மூலம் தமிழகத்தில் சுமார் 8 ஆயிரம் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இதுவரையில் சுமார் 4.6 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.