இன்று தொடங்கியது கவுன்சிலிங்… 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்.!
சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 9 கல்லூரிகளுக்கு பல்வேறு காரணங்களால் இந்தாண்டு மாணவர் சேர்க்கை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 433 கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங்கை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
இன்று மற்றும் நாளை, அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான சிறப்பு இடஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதற்கடுத்ததாக பொது கலந்தாய்வு தொடங்க உள்ளது.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 1.80 பொறியியல் சேர்க்கை இடங்கள் உள்ளன. அதற்கு மொத்தம் 2.09 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில் 1.99 லட்சம் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டு 442 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்த நிலையில் 433 கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கடந்தாண்டு போதுமான அளவு மாணவர் சேர்க்கை இல்லாதது, சரியான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 9 கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கல்லூரிகள் மூடப்படும் சூழ்நிலையில் உள்ளது.