#Breaking:பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை -அரசானை வெளியீடு..!
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது 9 ஆம் வகுப்பில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என்று தமிழக அரசு இன்று அரசானை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது ரத்து செய்யப்பட்டது.இதனால்,பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என குழப்பம் நிலவியது.
இதனையடுத்து,தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 9 ஆம் வகுப்பில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
இந்நிலையில்,பாலிடெக்னிக் கல்லூரிகள் 2021-2022-ஆம் கல்வியாண்டு முதலாமாண்டு மாணவர் சேர்க்கையானது 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு இன்று ஆணை வெளியிட்டுள்ளது.மேலும்,அந்த அரசாணையில்,
“10-ஆம் வகுப்பு கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் முதலாமாண்டு பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை செய்யப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது .
மேலும் 12.06.2021 அன்று மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள், உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்கக அலகு அலுவலர்களுடன் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இதுவரையில், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு பட்டயப்படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி என்றிருந்த போதிலும், 2020-21-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு இறுதி தேர்வு நடத்துவது கொரோனா காரணமாக கைவிடப்பட்டதை தொடர்ந்து, 9-ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டயப் படிப்பு மாணாக்கர் சேர்க்கை செய்து கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.