அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை.. 90ஆயிரம் காலி இடங்கள், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்.!
அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறவுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ள நிலையில் அதற்கான மாணவர் சேர்க்கையை ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் நடத்தப்படுகிறது.
இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. மொத்தமாக 90 ஆயிரம் இடங்கள் மட்டுமே காலியாகியுள்ள நிலையில், கல்லூரியில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கைக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளது. அவை யாவும் அந்தந்த கல்லூரிகளுக்கு அடுத்தக்கட்ட பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் சேர போகும் மாணவர்களுக்கான செய்திகள் குறுஞ்செய்தி மூலமாகவோ, இமெயில் மூலமாகவோ தெரிவிக்கப்படும். கல்லூரியில் சேர முதலில் மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் அவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.