வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி!
சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், இன்று முதல் பக்தகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கிலும் சென்னை வடபழனி முருகன் கோயிலில் திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் பணியாளர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 108 சிவாச்சாரியார்கள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மட்டுமே கும்பாபிஷேகம் விழாவில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் காண்பதற்காக வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
மேலும், வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.கொரோனா தொற்று குறையும் போது இறை அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோயில்கள் அனைத்து நாட்களிலும் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று குடமுழுக்கு நடைபெற்று முடிந்த நிலையில், வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வடபழனி முருகன் கோயிலில் இன்று அதிகாலையிலேயே 2,000க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது.