#BREAKING: ஜனவரி14-18ம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..!
தமிழகத்தில் வரும் 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது.
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளும் வகையிலும் பரவிவரும் உருமாறிய கொரோனா -ஓமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய் தொற்று பரவ அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி
- 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
- 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு.
- பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
- தற்போது, ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.