தமிழகத்தையே உலுக்கிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு ஒத்திவைப்பு.!

professor Nirmala Devi

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவி ஆஜராகாததால் தீர்ப்பை வருகிற 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, அதே கல்லூரியை சேர்ந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நிர்மலா தேவி மீது 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதன்படி, நிர்மலா தேவி மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டு, நிர்மலா தேவி மீதான விசாரணையை சிபிசிஐடியில் இருந்து சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) மாற்றப்பட்டு தொடர் விசாரணையில் இருந்து வந்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

ஆனால், முதல் குற்றவாளியான  நிர்மலா தேவி , உடல்நலக்குறைவால் ஆஜராகாததால் தீர்ப்பை ஏப்ரல் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்