கல்வி கட்டண தொடர்பான வழக்கு 17-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.!
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தமிழக அரசு தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்க பெற்றோர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என அரசாணை பிறப்பித்தது. மேலும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தியது.
தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவணை முறையில் கட்டணம் வசூலிக்க அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப மனுதாரர் சங்கத்திற்கு அறிவுறுத்தியது.
பின்னர், தமிழக உயர் கல்வித் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், தனியார் கல்லூரிகள் ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் ஏப்ரல் (2021 ) ஆகிய மூன்று மாதங்கள் தவணைகளாக கட்டணம் வசூலிக்கலாம் கூறியது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பல தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளதால் அனைத்து வழக்குகளும் வருகிற 17-ம் தேதி விசாரிக்கப்படும் என கூறி வழக்கை ஒத்திவைக்கப்பட்டது.