தவெகவில் இணைய திட்டமா? – ஆதவ் அர்ஜுனா பதில்!
புதிய அரசியலை உருவாக்க எதிர்கால பயணம் குறித்தும் விரைவில் அறிவிப்பேன் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாக விமர்சித்தும், தவெகவுக்கு மறைமுகமாக ஆதரவாக பேசியிருந்தார்.
கூட்டணி கட்சியில் இருந்து கொண்டே திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்ததன் காரணத்தால், ஆதவ் அர்ஜுனாவை விசிகவிலிருந்து 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, தான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி, ‘நான் என்றும் மதிக்கும் அன்பு தலைவர் என திருமாவளவனை’ குறிப்பிட்டு கடிதம் வாயிலாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்ற கொள்கையுடன் புதிய அரசியலை உருவாக்க எதிர்கால பயணம் குறித்தும் விரைவில் அறிவிப்பேன் என்றார்.
இது தொடர்பாக பேசிய ஆதவ் அர்ஜுனா, “தலைவர் திருமாவளவனின் வார்த்தைக்கு நான் என்றுமே கட்டுப்படுவேன். அவருடைய அன்பையும், வாழ்த்துகளையும், அட்வைஸையும் எடுத்துக்கொண்டு நான் பயணிப்பேன். அவரிடம் இருந்து கள அரசியலை நான் நிறையக் கற்றிருக்கிறேன்.
எப்போதுமே அவர் என்னுடைய ஆசான், கொள்கை சார்ந்த விஷயத்தில் எப்போதுமே என்னுடைய பயணம் அவருடன் இருக்கும். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, “எங்கு இணைகிறேன் என்கிறதை விட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்கிறேன்.
எதிர்கால அரசியல் குறித்து விரைவில் அறிவிப்பேன்” என்று கூறினார். இதனிடையே, இன்று காலை ஆதவ் அர்ஜுனா விலகல் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியபோது, “என்ன நினைத்தாலும் அது கட்சிக்குள் சொல்லி கட்சியின் குரலாக ஒலிக்க வேண்டும்.
சரி என்ற அடிப்படையில்தான் அவர் அந்த முடிவை எடுத்திருக்கிறார், மற்றபடி, கட்சியிலிருந்து அவரை நீக்க வேண்டும் அல்லது அவர் கட்சியில் இருந்து அவர் விலகவேண்டுமோ என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.