கூடுதல் மானியம்! ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டத்திற்கு 206 கோடி ஒதுக்கீடு..!
2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதன்பின், பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளை ஒவ்வொன்றாக அமைச்சர் வெளியிட்டு வருகிறார். அதில் அமைச்சர் கூறியதாவது, 2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் அறியவிக்கப்பட்ட திட்டங்கள் செயப்படுத்தப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட பலன்களை தந்துள்ளது. நீண்ட கால திட்டங்களுக்கான பணிகள் தகுந்த மேற்பார்வையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண் பட்ஜெட்.. 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்பு…!
இந்த சூழலில், மண்வளத்தை பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து செய்முறைகளையும் ஊக்கப்படுத்த ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள விளைநிலங்களின் மண் வளத்தை காக்க 22 இனங்களுடன் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும் என்றார்.
மேலும் எளியோரையும் ஏற்றமடைய செய்யும் நோக்கில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு, குறு விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம் வழங்கும் திட்டம் கடந்தமுறை அறிவிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பை பெற்றது. அதன்படி, இந்தமுறையும் சிறு,குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவித்தார்.
நுண்ணீர் பாசனம், வேளாண் இயந்திரங்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும். இதுபோன்று, 10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுகைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியமும், நிரந்தர மண்புழு உரத்தொட்டிகள், உரப்படுகை அமைக்க ரூ.5 கோடி மானியமும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.