இன்று முதல் கூடுதல் தளர்வுகள்;இதற்கான தடை நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் நீக்கம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “முதல்வர் அவர்களது வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும்,மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீள திரும்புவதற்கு ஏதுவாகவும்,
இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (3-3-2022) முதல் நீக்கப்படுகிறது.
மேலும்,கொரோனா தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திட இன்று முதல் 31-3-2022 வரை கீழ்க்கண்ட செயல்பாடுகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது.
- திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 500 நபர்களுக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படும்.
- இறப்பு சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 250 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்படும்.
- மேற்சொன்ன இரண்டு கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர தடுப்பு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.
மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கட்டாயம் மக்கள் முகக் கவசம் பொது இடங்களில் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்வதாக முதல்வர் கூறியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-3-2022 முதல் நீக்கப்படுகிறது என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/W2ksoqvGS1
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 2, 2022