நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் – தமிழக அரசு அரசாணை!
ரூ.10 கோடி வரையிலான பணிகளுக்கு நகராட்சி நிர்வாகமே அனுமதி வழங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியீடு.
தமிழ்நாட்டில் நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.10 கோடி வரையிலான பணிகளுக்கு நகராட்சி நிர்வாகமே அனுமதி வழங்கலாம் என்றும் ரூ.10 கோடிக்கு மேலான பணிகளுக்கு அரசு அனுமதி பெற வேண்டும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 20 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகள் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) இருப்பதாக நகராட்சி நிர்வாக இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். நகர்ப்புற சமுதாயத்தின் வாழ்வாதார நிலையை மேம்படுத்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சமயத்தில், இதனை ஒழுங்குபடுத்துவது மற்றும் பொறியியல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளைத் தேர்ந்தெடுப்பது, நிர்வாக அடிப்படையில் பணிகள், திட்டங்களுக்கு ஒப்புதல் மற்றும் அனுமதி வழங்குவது, தகுதிவாய்ந்த அதிகாரியால் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை பகுப்பாய்வு செய்ய அனுமதிப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கபடுகிறது என கூறப்பட்டுள்ளது.