சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,” விஜயலட்சுமி பரபரப்பு!
உச்சநீதிமன்றத்தில் சீமான் தொடர்ந்த வழக்கில் எனக்காக யாரும் வாதிடவில்லை. எனவே இதற்கு மேல் போராடப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து இருந்தார். இது தொடர்பான வழக்குகள் காவல் நிலையத்தில் பதியப்பட்டிருந்த நிலையில், இதனை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அதன் பெயரில், சீமான் வீட்டில் சம்மன் ஒட்டி, அதனை ஒருவர் கிழித்து அதன் பிறகான பல்வேறு களோபரங்களுக்கு பிறகு சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் ஆஜராகி காவல்துறை கேள்விகளுக்கு விளக்கம் அளித்து இருந்தார். அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, நடிகை குறித்த விசாரணைக்கு தடை கேட்டு சீமான் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது. இதில், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு எட்ட உத்தரவும் வழங்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில், சீமான், அந்த நடிகையை மிக கடுமையாக விமர்சித்து இருந்தார். விருப்பப்பட்டு 6 மாதம் உறவில் இருந்ததாகவும், பணம் கொடுத்து உதவி செய்தது உட்பட பல்வேறு சர்ச்சை கருத்துக்களையும் பேசி இருந்தார். இதனை அடுத்து அண்மையியல் அழுதபடி வீடியோ பதிவிட்டு இருந்தார் நடிகை விஜயலட்சுமி.
இப்படியான சூழலில் தற்போது புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி, ” எனக்கு நடந்தவற்றை மீடியா மூலம் வெளியுலகிற்கு சொல்லணும்னு ஆசைப்பட்டேன். உச்சநீதிமன்ற தீர்ப்பில் செட்டில்மென்ட் என்று சொல்லி இருக்காங்க. இதனை பார்த்ததும் பலர் சீமான் எனக்கு ரூ.10 கோடி இரவோடு இரவாக கொடுத்துவிட்டார். ஈழத்தமிழர் காசை விஜயலட்சுமிக்கு கொடுத்துட்டார் என சிலர் அபாண்டமாக பழி போட்டுவிடுவர்.
அதனை தவிர்க்கவே தற்போது இந்த வீடியோ போடுகிறேன். நேற்று உச்சநீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் சென்னையில் பதியப்பட்ட FIR மீது காவல்துறை விசாரணை மேற்கொள்ளக் கூடாது என வழக்கு தொடர்ந்து இருந்தார். காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் எனக்காக வாதிட்டனர். உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு கொடுத்தார் அதன் பெயரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், உச்சநீதிமன்றத்தில் என் சார்பாக யாரும் பேசவில்லை. சீமான் கோரிக்கை மட்டுமே கேட்டு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் எனக்காக வாதிட்டவர்கள் ஏன் நேற்று உச்சநீதிமன்றத்தில் யாருமே போய் கேட்கவில்லை? இனி எனக்கு எந்த நீதியும் நியாயமும் கிடைக்காது என தெரிந்து கொண்டேன். இனி நான் போராடப்போவதில்லை. இதுவரை மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இப்போது கூட நான் இந்த வீடியோ ஏன் பதிவிடுகின்றேன் என்றால், எனக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்பதை தெரியப்படுத்த தான் என நடிகை விஜயலட்சுமி அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.