ராஜபாளையத்தில் பாஜக சார்பில் நடிகை கவுதமி போட்டியா?- சுதாகர் ரெட்டி
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என சுதாகர் ரெட்டி அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் பாஜக தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் நடிகை கவுதமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சுதாகர் ரெட்டி, ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இந்த தொகுதியில் போட்டியிடும் கவுதமி வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும் அனைவரும் அவர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் எனவும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியின் தலைமை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? வேட்பாளர்கள் யார்? என்பதை கலந்து பேசி அறிவிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுக்கு என சில சட்ட திட்டங்கள் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், ராஜபாளையம் தொகுதியில் நடிகை கவுதமியை வேட்பாளர் என பாஜக தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அறிவித்துள்ளது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.