தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி!
சட்டப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.
27% ஓபிசி இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் சட்டப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுக தலைவர் – தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
இதற்கான சட்டப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் அவர்களுடைய நலனுக்கான இயக்கங்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அவர்களோடு நானும் அகரம் அறக்கட்டளை சார்பாக இணைந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
4000 மருத்துவக் கல்வி இடங்கள் இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கிடைக்கவிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உயர்கல்வியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்களுடைய மொத்தப்பதிவுச் சுட்டெண் (Gross Enrolement Ratio) தேசிய மற்றும் மாநில சராசரிகளை விட அதிகம்.
எனவே இந்தத் தீர்ப்பானது ஒரு வருடத்திற்கு 800க்கும் மேற்பட்ட கொங்கு மண்ணைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கும் என்பது எனது நம்பிக்கை. சமூக நீதிப்பாதையில் தொடர்ந்து தமிழ்நாடு வீறு நடைபோடட்டும் என்றும் நாமும் உடன் நிற்போம் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே, முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று உறுதி அளித்தது. PG மருத்துவப் படிப்புகளில் AIQக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுக்கொண்ட திமுகவுக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.