‘இனி நான் திமுக கட்சி உறுப்பினர்’ சத்யராஜ் மகள் திடீர் முடிவு!
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப் போலவே நடிகர் சத்யராஜூம் திமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார், திராவிடர் கருத்துக்களை கூறி வரும் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே சத்யராஜ் உள்ளார்.
இப்படியான சூழலில், இன்று சத்யராஜ் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தன்னை திமுகவில் இணைத்து கொண்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் திவ்யா தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பியும், கட்சி பொருளாளருமான டி.ஆர்.பாலு, திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.