சசிகலா உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்தார் – டிடிவி தினகரன்
சசிகலா உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொலைபேசி மூலம் விசாரித்தார் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இருந்து நேற்று காலை புறப்பட்ட சசிகலா, சுமார் 20 மணி நேரம் பயணம் செய்து சென்னை வந்தார். அவரது தொண்டர்கள் வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சென்னை வந்த சசிகலா, ராமாவரத்தில் உள்ள முன்னாள் முதல்வர், அதிமுக நிறுவருமான எம்ஜிஆரின் இல்லத்துக்கு சென்று, அவரது உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள இல்லத்திற்கு சசிகலா சென்றார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம், அதிமுக சார்பாக சட்டமன்றம், நாடாளுமன்றம் உறுப்பினர்கள் என யாராவது சசிகலா உடல்நிலை குறித்து விசாரித்தார்கள் என்ற கேள்விக்கு பதில் கூறிய தினகரன், சசிகலா உடல்நலம் குறித்து நடிகர் மற்றும் நண்பர் ரஜினிகாந்த் நேற்று தொலைபேசி மூலம் விசாரித்தார் என்றும் எம்எல்ஏயோ அல்லது மந்திரியோ விசாரித்ததை சொன்னால் தேவையில்லாமல் அவர்களுக்கு தான் பிரச்சனை வரும், ஆகையால் அது தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.