“காச நோயை விட ‘காசு’ நோய் கொடியது” ஆளுநர் மாளிகையில் பார்த்திபன் கலகல!
உலகில் காச நோயை விட காசு நோய் பெரியது என நடிகர் பார்த்திபன் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் பேசினார்.

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நேற்று ஆளுநர் மாளிகையில் உலக காச நோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காச நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது புத்தகமான “ஒரு கனவு மெய்ப்பட வேண்டும்” என்ற நூலை ஆளுநரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பேசி அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டார். அவர் பேசுகையில், காச நோயை விட பெரியது காசு நோய். அந்த நோய் தான் கொடியது. சமீபத்தில் எனது ரீல் ஒன்று பிரபலமானது. ‘உலகத்தில் பணத்தை விட பெரிய விஷயம் நிறைய இருக்கிறது. ஆனால், அதனை எல்லாவற்றையும் பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும்.’ சமூகத்தில் காச நோயை குணப்படுத்தக்கூடிய உணவு, பராமரிப்பு கவனம் என இவர்கள் (மருத்துவர்கள்) கூறினார்.” எனபேசிவிட்டு குட்டி கதை ஒன்றை கூறினார்.
அதில், உதவி செய்ய வசதி பிரச்சனை இல்லை. இன்னும் சொல்லப்போனால் சராசரி மக்கள் தான் அதிகமாக உதவி செய்கிறார்கள். பணக்காரன் விளம்பரம் தான் தேடிக்கொள்வான். மதுரையில் ஒரு நபர் 1000 நாள் 1000 பேருக்கு அன்னதானம் போடப்போகிறேன் எனக் கூறி என்னை வைத்து படம் எடுக்க பூஜை போட்டான். பிறகு தான் அது போலி என தெரிந்தது. பின்னர் மதுரை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தேன்.
நான் மலையாள செய்திகள் படிப்பேன். அதில் ஒரு 15 வருடத்திற்கு முன்னர் வந்த செய்தி என்னை மிக கவர்ந்தது. அதில், 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவருக்கு 2 திருமணம் ஆகாத பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர் முத்து என்ற லாட்டரி வியாபாரியிடம் 5 லாட்டரி வாங்குகிறார். ஆனால் அந்த முதியவர் 250 ரூபாய்க்கு பதிலாக 100 ரூபாய் கொடுத்துவிட்டு 150 ரூபாய் பிறகு தருகிறேன் என கூறிவிட்டு வாங்கி சென்றார்.
பின்னர், அந்த லாட்டரிக்கு 1.15 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளது. இந்த லாட்டரி முத்துவிடம் இருந்துள்ளது. முத்துவின் மனைவி இந்த பணத்தை நாம் எடுக்க கூடாது. இது பாவம். இது நம்மை சும்மா விடாது. என கூறுகிறார். முத்துவிற்கு 3 பெண்குழந்தைகள் உள்ளன. இருந்தாலும் அந்த முதியவரை தேடி பிடித்து லாட்டரியை கொடுத்துள்ளார். அந்த முதியவரோ நான் அதற்கு பணம் கூட கொடுக்கவில்லை என கூறியுள்ளார். நீங்கள் எனக்கு தரவேண்டிய 150 ரூபாய் மட்டும் கொடுங்கள் என முத்து கூறியுள்ளார்.
இதனை தெரிந்து கொண்ட நான், அந்த முத்துவின் குடும்பத்தினரை தேடி பிடித்து அவர்களை விமானத்தில் வரவழைத்து சென்னையில் ஒரு பெரிய ஹோட்டலில் தங்க வைத்து, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு முன்னிலையில் உலகின் தலைசிறந்த மனிதர் எனும் விருதையும் ரூ.1 லட்சம் பணமும் அவருக்கு வழங்கினேன் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.” நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் நடிகர் பார்த்திபன்.
மேலும் பேசிய அவர், எனக்கு ஆளுநருடன் பேச பேச அவர் மீது ஒரு காதல் வந்துவிட்டது. இன்னும் நிறைய சந்திப்புகளை நடத்த வேண்டும் என்றும் அவர் செய்யும் நல்லதுகளில் உடந்தையாக நானும் இருக்க வேண்டும் என்றும் பேசிமுடித்தார் நடிகர் பார்த்திபன்.