ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்
2023-ஆம் ஆண்டு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தலைமையில், சிறப்பு பேருந்துகள் இயங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், அமைச்சர் சிவசங்கர் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்து கட்டணம் 5% குறைப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஆம்னி பேருந்துகள் செயல்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில், போக்குவரத்து துறையின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு 25% கட்டணம் குறைக்கப்பட்டது என்றும், ஆம்னி பேருந்துகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் நலன் கருதி 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 10,975 பேருந்துகள், பிற ஊர்களில் இருந்து 5,920 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள், நவ.9ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி முடிந்து சென்னை திரும்ப ஏதுவாக 13 முதல் 15ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், முன்பதிவு செய்ய விரும்புபவர்கள், www.tnstc.in என்ற இணையதளத்திலும், TNSTC செயலியிலும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.