குமரி மாவட்டத்தில் மீன்வள கல்லூரி தொடங்க நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்வள கல்லூரி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கடலுக்கு செல்லும் மீனவர்கள் கானாமல் போகும் பட்சத்தில் அவர்களை தேடுவதற்கு வசதியாக கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைப்பதற்கான முயற்சியை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.
கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், சரிசெய்யவும் ஆயிரத்து 200கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
கடல் உணவு தயாரிப்பு தொடர்பான சிறப்பு பயிற்சி சென்னை ராயபுரத்தில் உள்ள மத்திய சமையலறைக் கூடத்தில் மீன்வளப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார்.
2017-18ம் ஆண்டில், கடலில் மீன்பிடிக்க சென்ற 128 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகமானது தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.