நியாயவிலை கடைகளில் வாங்கும் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்ற நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை..!

Default Image

நியாயவிலை கடைகளில் வாங்கும் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்ற 191 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் செயலில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்கள் மீது உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத்திட்டம் / சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980ன் படி தடுப்பு காவலில் வைக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, 21.11.2022 நடவடிக்கைகளும் முதல் 27.11.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ. 11,73,395/- (பதினொறு இலட்சத்து எழுபத்து மூன்றாயிரத்து முந்நூற்று தொண்ணூற்று ஐந்து ரூபாய் மட்டும்) மதிப்புள்ள 1809 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி மற்றும் மண்ணெண்ணெய் 87 லிட்டர், 72 எரிவாயு உருளை, துவரம் பருப்பு 3520 கிலோ ஆகியவையும். மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 47 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட குற்றச் செயலில் ஈடுபட்ட 191 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்