கொரோனா நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருப்பத்தூர் திருநங்கைகள் கோரிக்கை!
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் கொரோனா நிவாரண தொகையாக தமிழக அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நான்காயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவராகிய அனைத்து திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகை தங்களுக்கு வழங்கப்படவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் குஷ்வாஹாவிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் நூற்றுக்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறோம். கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு தங்களுக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்து இருந்தது.
சமூக நலத்துறை மூலமாக நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் எங்களுக்கான அடையாள அட்டை கொடுத்து நிவாரண தொகை கேட்டபொழுது புதிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து தங்கள் மனுவை நிராகரித்து விட்டனர்.ஆம்பூர், வாணியம்பாடி, நாற்றம்பள்ளி மாவட்டங்களை சேர்ந்த திருநங்கைகளுக்கு மட்டும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சமூக நலத்துறை அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். எனவே, எங்களுக்கு வந்து சேரவேண்டிய நிவாரணத் தொகை இன்னும் வந்து சேராததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் குஷ்வாஹா அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் திருப்பத்தூரை சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிவாரணத்தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்துள்ளார்.