“தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை,மீண்டும் தமிழகத்துடன் இணைக்க நடவடிக்கை தேவை” – பாமக நிறுவனர் ராமதாஸ்..!

Default Image

நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக நாளை கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக நாளை கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட தமிழர்கள் அதிகம் வாழும் 9 வட்டங்களில் திருத்தணி தவிர மீதமுள்ள 8 வட்டங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. அதேபோல், தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றை கேரளத்திடம் இழந்தோம்.

அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் தமிழகத்துடன் இணைந்திருக்கவே விரும்புகின்றனர். அந்தப் பகுதிகளை இணைப்பது பாலாறு, முல்லைப் பெரியாற்றுப் பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கும் உதவும். தமிழகத்தின் வரைபடமும் முழுமையடையும்.

தமிழ்நாடு நாள் குறித்த தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்து விட்டு, பிற மாநிலங்களில் உள்ள தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கு தேவையான அரசியல் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்