நெல் கொள்முதல் செய்யும் விவசாயிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்
நெல் கொள்முதல் செய்யும் விவசாயிகளிடம் யாராவது கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் 22 தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கி வைத்து விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது தற்போது மழைக்காலம் என்பதால் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் நெல்களை உரிய முறையில் பாதுகாத்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 90 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நியாயமான விலை கிடைக்கவும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்யும் விவசாயிகளிடம் யாராவது கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மழைக்காலங்களில் நெல்லை சேமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை அதிகாரிகள் விற்பனை செய்ய துணை போனால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.