13 பேரை சுட்டுக் சுட்டுக்கொன்றவர்கள் மீது ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின் உறுதி

Default Image
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அமைதிப்பேரணியில் 13 பேரை காக்கை குருவிகள் போல சுட்டுக்கொன்றவர்கள் மீது திமுக ஆட்சி அமைந்ததும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 கடந்த ஜனவரி 28-ஆம் தேதி முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற புதிய கோணத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில்,  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 13 பேரை சுட்டுக் கொன்றது இந்த ஆட்சி. அது ஒரு கருப்பு நாள்.நியாயமான முறையில் 100 நாட்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள். 100-வது நாள் ஒரு பேரணியாக வந்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், மறியல் செய்ய வேண்டும், கலவரம் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் வரவில்லை. அமைதியாக ஒரு பேரணியை நடத்தி மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து மனுக் கொடுக்க வேண்டும் என்று வந்திருக்கிறார்கள்.
ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர், அலுவலகத்தில் இருந்து அதைப் பொறுமையாக வாங்கி இருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. ஆனால், அவர் ஆட்சி – அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு அந்த இடத்தை விட்டு வெளியில் சென்றுவிட்டார்.
அதற்குப் பிறகு அந்தப் பேரணியைக் கலைக்கவேண்டும், கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு சென்னைக் கோட்டையில் இருந்து அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிட்டார்கள். அதனால் தடியடி நடத்தப்பட்டது. அதற்குப்பிறகு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 13 பேரை காக்கை குருவிகளை சுட்டுத் தள்ளுவது போலச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.அதுமட்டுமின்றி, இந்தச் சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்” என்று சொல்லும் நிலை தான் இருந்தது. எதுவும் தெரியாதது போல பாவலா செய்து கொண்டிருந்தார்.
முதலமைச்சர் நேரடியாக வந்து பார்க்கவில்லை. அதற்காக வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. இந்திய நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் அந்தக் கொடுமைக்கு இதுவரையில் வருத்தம் தெரிவிக்கவில்லை. நிச்சயமாக நாம் ஆட்சிக்கு வரப் போகிறோம். வந்ததற்குப் பிறகு அதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம். அது மட்டுமின்றி அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் எல்லாம் நிச்சயமாக நாம் ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் ரத்து செய்வோம் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்