3 கல்லூரிகளுக்கு ஒப்புதல் -பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி
கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
.அவரது அறிக்கையில்,தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களான கிருஷ்ணகிரி ,திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசின் அனுமதியும்,மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதியுதவியும் வழங்க மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களிடம் நான் கோரிக்கை வைத்து,அதற்கான முன்மொழிவுகள் தமிழ்நாடு அரசால் குறுகிய காலத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேற்படி மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க தேவையான நிலம் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எனது கோரிக்கையை ஏற்று கிருஷ்ணகிரி ,திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி தமிழகத்தில் புதிய 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி பெற்றதோடு மட்டும் அல்லாமல் தற்போது கூடுதலாக 3 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.ஒரே ஆண்டில் ஒன்பது புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது வரலாற்று சாதனையாகும்.இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.