விசாரணைக்கைதிகளின் பல்பிடுங்கப்பட்ட வழக்கு; சிபிசிஐடி க்கு மாற்றம்.!
கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த வழக்கில், சிபிசிஐடி க்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங், விசாரணைக்கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்களின் பற்களை பிடுங்கிதாக, அங்கு பணியில் இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் மற்ற காவல் அதிகாரிகள் மீது புகார்கள் எழுந்தது.
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வீர் சிங் மார்ச் 29ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கான ஆணையை அரசு, கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிட்டது.
உயர்மட்ட விசாரணைக்குழு அதிகாரி, அமுதா ஐஏஎஸ் விசாரணையின் பேரில் பரிந்துரைக்கப்பட்டு, தற்போது வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சிபிசிஐடி க்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.