இதில் மருத்துவமனைக்கு தொடர்பிருந்தால் அங்கீகாரம் ரத்தாகும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சிறுமியின் கருமுட்டை விற்பனை விஞ்ஞான ரீதியிலான மாபெரும் கொள்ளை என மருத்துவத்துறை அமைச்சர் பேட்டி.
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு, சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கவால்துறையினர் சிறுமியின் தாயார் இந்திராணி மற்றும் அவரது இரண்டாவது கணவர் சையத் அலியை கைது செய்தனர்.
கருமுட்டை விற்பனைக்கு இடைத்தரகராக செயல்பட்ட டைலர் மாலதி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இதுதொடர்பாக மேல் விசாரணையில் சிறுமியின் ஆதார அட்டையில் வயதை போலியாக மாற்றி கருமுட்டையை விற்பனை செய்தது அம்பலமானது. இந்த நிலையில் ஆதார் அட்டையில் ஆன்லைன் செயலி மூலம் வயதை மாற்றிய ஜான் என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், சிறுமியின் கருமுட்டை எந்த மருத்துவமனைக்கு விற்பனை செய்யப்பட்டது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுமியின் கருமுட்டை விற்பனை என்பது விஞ்ஞான ரீதியிலான மாபெரும் கொள்ளை என தெரிவித்தார்.
கருமுட்டை விற்பனை தொடர்பாக காவல்துறையிடம் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். ஆனால், அதுதானா என்று உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறை கூறியதாக தெரிவித்தார். இருப்பினும், இதுதொடர்பாக முழுமையாக உரிய விசாரணை நடத்திய பிறகு கருமுட்டை விற்பனையில் தொடர்பியிருந்தால் தனியார் மருத்துவமனையின் அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் இதில் எந்தவிதமான தயவு இருக்காது எனவும் குறிப்பிட்டார். கருமுட்டை விற்பனை தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.