மருத்துவ கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து இல்லை.. தொடர்ந்து இயங்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து இயக்க அனுமதி என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.
சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அங்கீகார ரத்து சான்று திரும்பப் பெறப்பட்டு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ரத்து செய்யப்படுவதாக முன்பு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டது மருத்துவ கல்லூரிகள் மூடப்படுவது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டது. இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஓரிரு சிறு குறைகளும் சரி செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டது. மருத்துவ கல்லூரிகளில் சிசிடிவி, பயோமெட்ரிக் போன்ற குறைபாடுகள் சரி செய்யப்பட்டன. தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் நேற்று கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தனர்.
நாளை ஆய்வு முடிந்தபின் திருச்சி மருத்துவ கல்லூரிக்கும் தீர்வு காணப்படும் என்றார். மேலும், அமைச்சர் கூறுகையில், மருத்துவ கலந்தாய்வை மாநில அரசுகளே நடத்தலாம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துவிட்டது. மருத்துவ படிப்புகளுக்கு பொது கலந்தாய்வை மத்திய அரசே நடத்த பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன எனவும் கூறியுள்ளார்.