ஃபெஞ்சல் புயல் அப்டேட் : எங்கு, எப்போது கரையை கடக்கும்?
ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், இன்று மாலையில் தான் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தகவலின்படி கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று பிற்பகல் ஃபெஞ்சல் புயலாக உருமாறி வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட வடதமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த புயலானது 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதன் வேகத்தை 12 கிமீ என அதிகரித்து உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தும் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியான வானிலை தகவலின்படி இன்று மாலை தான் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய கூற்றுப்படி, காரைக்கால் – மாமல்லபுரம் இடையே உள்ள கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என கூறப்படுகிறது. இருந்தும் காற்றின் வேகம் பொறுத்து புயலின் திசையில் மாறுபாடு ஏற்பட்டு கரையை கடக்கும் இடமானது சென்னையை நெருங்கலாம் என்று தனியார் வானிலை ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
புயல் கரையை கடக்கும் சமயத்தில் 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அந்த சமயம் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.