ஆளுநரிடம் கொடுத்த ஊழல் பட்டியலின்படி எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை – அமைச்சர் ரகுபதி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் கொடுத்த ஊழல் பட்டியலின்படி எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு வீட்டில் சோதனை நடைபெற்றது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் போக்குவரத்துத்துறை எம்.ஆர் விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சொத்து குவித்ததாக எழுந்த புகாரை அடுத்து, விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சோதனையில் 25 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்திருந்தனர். பின்னர் விஜயபாஸ்கர், அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து, சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், பண பரிவா்த்தனை ஆவணங்கள் ஆகியவைற்றை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அரசியல் காழ்ப்புணா்ச்சியின் காரணமாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மீது பொய்யான வழக்குகளை புனைய திமுக அரசு காவல்துறையை ஏவிவிட்டு சோதனையிட்டு வருவதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கண்டம் தெரிவித்தனர். மேலும் விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுதியனாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் எந்த ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவும் சோதனை செய்யவில்லை என்றும் ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் கொடுத்த ஊழல் பட்டியலின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
தமிழக்தில் கடந்த ஆட்சியில் அதிமுக அமைச்சர்கள் பலர் அனைத்துத் துறைகளிலும் ஊழல் செய்துள்ளார்கள் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றசாட்டி ஆளுநரிடம் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை இரண்டு கட்டங்களாக ஆதாரத்துடன் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.