சாதி ரீதியான பள்ளி பெயர்களை நீக்க வேண்டும் – நீதிபதி சந்துரு குழு அறிக்கை!
சென்னை : தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே ஏற்படும் சாதி வன்முறைகளை தடுப்பதற்கு, ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு, ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் ஒரு இடைநிலை சாதியைச் சேர்ந்த மாணவர்களால் பட்டியலிடப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு பள்ளிக் குழந்தைகள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், சகோதரத்துவம் காப்பதற்கான வழிமுறைகளை வகுத்திடவும் தமிழ்நாடு அரசால், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் பலர் முன்னிலையில், சந்துரு தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள்:
- அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சாதி ரீதியிலான பெயர்கள் இருந்தால் அதை நீக்க வேண்டும்.
- சாதி ரீதியான பெயர்களை நீக்க தவறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை கொடுப்போரின் பெயர்களில் சாதி இடம் பெற்றிருந்தால் நீக்க வேண்டும்.
- கள்ளர் மறுவாழ்வு மற்றும் ஆதி திராவிடர் நலன் என்று பள்ளி பெயர்களில் வரும் வார்த்தைகளை நீக்க வேண்டும். சாதி ரீதியான பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும்.
- அந்தந்த பகுதியில் உள்ள பெரும்பான்மை சாதியை சேர்ந்தோரை CEO, DEO, BEO ஆக நியமிக்கக் கூடாது. பள்ளி, கல்லூரி, ஆசிரியர், பணியாளருக்கு சாதி பாகுபாடு குறித்த விழிப்புணர்வு நடத்த வேண்டும்.
- அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை உள்பட எந்த சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது.
- பள்ளிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே, புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.
- குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது.
- ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும்.
- கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.