சனாதன கருத்தை நீக்குங்க, இல்லையெனில் போராட்டம் – சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன்
சனாதனம் கருத்து குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.
கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎஸ்இ-ன் ஆறாம் வகுப்பு பாட திட்டத்தில் உள்ள சனாதன கருத்தை நீக்க வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் நடைபெறும். இந்த பாடத்தில் உயர்சாதி, கீழ் சாதி என வரிசையிட்டு படம் போடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக மத்திய அரசு இந்த பாடத்திட்டத்தை ஆறாம் வகுப்பில் சேர்த்திருப்பது என்பது மிகமிக கடுமையான கண்டனத்துக்குரியது.
சனாதனம் குறித்து பேசியானால் ஆத்திரப்படுபவர்கள், இதுதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும். இந்த பாடத்திட்டத்தை உடனடியாக நீக்கவில்லை என்றால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த பாடத்திட்டத்தை எரிக்கின்ற போராட்டத்தை நடத்த அவசியம் ஏற்படும் என தெரிவித்தார். இந்துக்களுக்கு எதிராக பேசியதாகக் கூறி பொய்யான குற்றச்சாட்டை தொடர்ந்து தெரிவித்துவரும் பாஜக தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து திமுக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டுகிறது.
மேலும், கோவை உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களின் தொடர்புடைய குற்றவாளிகளை சிசிடிவி ஆதாரத்தை வைத்து கைது செய்து சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என்றும் காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கம் பேரணி நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதற்கு தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் கூறினார்.