தவெக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்.., ஒன்றாக களமிறங்கிய ஆதவ், ஆனந்த்!
மார்ச் 28ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் தவெக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை ஆதவ் அர்ஜுனா மற்றும் ஆனந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் வைத்து நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2,500 முதல் 3000 வரையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும், மாவட்ட பொறுப்பாளர்கள், மற்ற நிர்வாகிகள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா , தவெக முக்கிய நிர்வாகி ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பொதுக்குழுவுக்கு தவெக தலைவர் விஜய் வரும் வழி, பார்க்கிங் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்த பிறகு நடைபெறும் கட்சி ரீதியில் மிக பெரிய நிகழ்வாக இந்த பொதுக்குழு பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தவெக கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அதனை அடுத்து இந்த பொதுக்குழு நடைபெற உள்ளது. கடந்த நிகழ்வில் பிரபல தேர்தல் வியூகவியாலாளர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதை அடுத்து, ஆலோசனை கூட்டம் நிறைவடைந்து இருப்பதால், இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு விஜய் Y பிரிவு பாதுகாப்போடு வருவார் என்றும் கூறப்படுகிறது.