பட்டினம்பாக்கம் இளைஞர் உயிரிழப்பு., ஸ்தம்பித்த சென்னை போக்குவரத்து!
சென்னை பட்டினம்பாக்கத்தில் அரசு குடியிருப்பு கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை : நேற்று (டிசம்பர் 4) சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் சீனிவாசபுரத்தில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வந்த சையது குலாப் எனும் 22 வயது இளைஞர், கட்டடத்தின் பால்கனி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.
அரசு குடியிருப்பு கட்டிடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டிடம் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் விபத்துகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை சீர் செய்து தர வேண்டும். இளைஞர் உயிரிழப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றான சாந்தோம், கலங்கரை விளக்கம் லூப் சாலை முதல் அடையாறு வரையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது. வாகனங்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நகராமல் ஒரே இடத்தில் நிற்கும் சூழல் உருவாகியது.
இதனை அறிந்த மைலாப்பூர் பகுதி திமுக எம்எல்ஏ வேலு தற்போது சம்பவ இடத்திற்கு வந்து சாலை மரியலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். உயிரிழந்த இளைஞர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை , உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.