சென்னையில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக சாலையில் விழுந்த பெண்
சென்னையில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் பெண் பயணி சரிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குறித்த பேருந்து பணிமனை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்து அமைந்தகரை அருகே சென்றபோது பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து ஓட்டை ஏற்பட்டது.
இதையடுத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவர் அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார். முழுதாக கீழே விழாமல் பேருந்தில் பெண் சிக்கிக்கொண்டார். பெண் பயணி விழுந்தது தெரியாமல் பேருந்து சிறிது தூரம் சென்றது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அப்பெண்ணை உடனடியாக மீட்டு அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.
12 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை – தமிழ்நாடு அரசு உத்தரவு
லேசான காயமடைந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பேருந்து ஓட்டையில் சிக்கி காயமடைந்த பெண் சென்னை மின்ட் பகுதியைச் சேர்ந்த ஷானா என்பதும், இவர் அமைந்தகரை என்.எஸ்.கே நகரில் உள்ள ஒரு பிரின்டிங் பிரஸில் வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. ஓடும் பேருந்தில் ஓட்டை விழுந்த சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்த நிலையில் பணிமனை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.