ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம், ரூ.20,000 கோடியில் புதிய விமான நிலையம் – முதலமைச்சர்

Default Image

புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு என முதல்வர் அறிக்கை.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாகும் புதிய பன்னாட்டு விமான நிலையம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் வளர்ச்சிப் பெற்ற கட்டமைப்பு வசதிமிகுந்த மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு நமது திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.

நம் மாநிலத்திற்கு வருகை புரியும் முதலீட்டாளர்கள், கற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது உள்ள சென்னை விமானநிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. மேலும். தற்போது நடைபெற்றுவரும் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு அடுத்த 7 ஆண்டுகளில் சென்னை விமானநிலையம் அதிகபட்ச அளவான ஆண்டிற்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை எட்டக்கூடும்.

மாநிலத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து சேவையை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையிலும் சென்னையில் புதிய விமானநிலையம் அமைக்க தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பணியை அரசு நிறுவனமான டிட்கோ நிறுவனம் மூலம் தமிழ்நாடுஅரசு மேற்கொண்டது. புதிய விமானநிலையம் அமைக்க நான்கு பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு செய்து சாத்தியமான இடங்களாக பரிந்துரைத்த இரண்டு இடங்களில் ஒன்றான பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சென்னை விமானநிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள விமானநிலையம் ஆகியஇரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் படிக்கட்டாக விளங்கும். 10 கோடி பயணிகளை கையாளும் திறன் உடையதாக புதிய விமான நிலையம் அமைய உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்தப்பின் புதிய விமான நிலையத்திற்கான திட்டமதிப்பு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்டமதிப்பு 20,000 கோடி ரூபாய் ஆகும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு, முன்னேற்ற அடையாளத்தைக் காண்கிற நிலையில், எதிர்காலத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு வளர்ச்சியினைக் காட்டும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு. தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் புதிய விமான நிலையம் மற்றொரு மைல் கல்லாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்