சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்.! திருச்சி நீதிமன்றம் உத்தரவு.!
சென்னை: சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல் விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கூறி யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார், சேலம், சென்னை, திருச்சி என பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், ஏற்கனவே கோவை கிரைம் போலீசார் முன்னதாக ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், அடுத்து திருச்சியில் பதியப்பட்ட வழக்கிற்காக நேற்று சவுக்கு சங்கர், கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி அழைத்து வரப்பட்டார்.
நேற்று திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனை அடுத்து , அவர் மீதான வழக்கு தொடர்பாக 7 நாள் போலீஸ் காவல் அளிக்க வேண்டும் என திருச்சி கிரைம் போலீசார் சார்பில் அனுமதி கோரப்பட்டது.
இந்த அனுமதி கோரிக்கை தொடர்பான விசாரணையை தொடர்ந்த நீதிபதி ஜெயப்பிரதா, அரசு தரப்பு மற்றும் சவுக்கு சங்கர் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு இன்று உத்தரவு பிறப்பித்தார். அதில், சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருச்சி கிரைம் போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியதாக திருச்சி கிரைம் போலீசாரால் பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் முதல் குற்றவாளியாகவும், பெலிக்ஸ் இரண்டாவது குற்றவாளியாகவும் குறிப்பிட்டுள்ளனர். பெலிக்ஸ் முன்னதாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.