தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!
இன்று தவெக ஐடி விங் நிர்வாகிகள் கலந்து கொண்ட பயிற்சி கூட்டம் அக்கட்சி தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல் களமே பரபரத்து கொண்டிருக்கும். அதற்காக தற்போதே கூட்டணிகள், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பிரதான கட்சிகள் தங்கள் வேலையை தீயாக தொடங்கிவிட்டன.
தேர்தல் அரசியலில் முதல் முறையாக களம் காணும் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு யூகங்களை ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே கட்சி மாவட்டம், வட்டம் உள்ளிட்ட நிர்வாக பொறுப்புகளுக்கு ஆட்களை நியமித்து, அடுத்ததாக பூத் கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணி, அதற்கான ஆலோசனை கூட்டம் என சென்று கொண்டிருக்கும் வேளையில் தவெகவினருக்கு தேர்தல் ரீதியான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தவெகவினருக்கான தேர்தல் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தவெகவை சேர்ந்த தொழில்நுட்ப பிரிவினர், சமூக ஊடக வலைதா பிரிவினர் ஆண், பெண் என சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி கூட்டமானது தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் நெருங்கும் சூழலில் சமூக ஊடக வலைதளங்களை எவ்வாறு கையாள வேண்டும், கட்சி செயல்பாடுகளை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.