ஒவ்வொரு ரயில் பயணமும் பதட்டமாகிறது., ரயில்வே என்ன செய்கிறது.? சு.வெங்கடேசன் காட்டம்.!
ஒவ்வொரு ரயில் பயணமும் நிம்மதி இல்லாத ஓர் பதட்டத்தை நோக்கி தான் செல்கிறது என மதுரை எம்பி சு.வெங்கடேசன் ரயில்வேத்துறை மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
சென்னை : நேற்று இரவு சென்னையில் இருந்து சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி – கவரப்பேட்டைக்கு இடையே உள்ள ரயில் பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது , மைசூரில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதில் 2 ரயில் பெட்டிகள் தீப்பற்றின. 6 ரயில்பெட்டிகள் தடம்புரண்டன. இந்த ரயில் விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்தில் காயங்கள் ஏற்பட்டவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒடிசா, மேற்கு வங்கம் , ஜார்கண்ட், உத்திர பிரதேசம் என பல்வேறு ரயில் விபத்துகள் அவ்வப்போது நிகழ்ந்து வருவதை சுட்டிக்காட்டி பல்வேறு கட்சியினர் ஆளும் மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை மீது தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ரயில் விபத்து குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், “ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் ஆய்வுகள் மட்டுமே நடைபெறுகிறது.
ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது? உயிர்சேதம் இல்லை என பெரும் நிம்மதி இருந்தாலும், ஒவ்வொரு ரயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீளாமல் இருக்கும் ரயில்வேத் துறை என்ன தான் செய்யப்போகிறது?” ஏன தனது விமர்சனத்தை சு.வெங்கடேசன் முன்வைத்துள்ளார்.
ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே .
ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது?
உயிர்சேதம் இல்லாத பெரும் நிம்மதி இருந்தாலும் , ஒவ்வொரு ரயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கி… pic.twitter.com/SY8nvJsjPr
— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 12, 2024