வேளாண் பட்ஜெட்… பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடிக்கு இலக்கு..!
சட்டப்பேரவையில் 4-வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று காலை 10 மணிக்கு தமிழக அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அப்போது” 2022-23-ஆம் நிதியாண்டில் பயிர் கடனாக 13,442 கோடி ரூபாய் 17 லட்சத்து 44 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023 -24 நிதியாண்டில் 16,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 13 ஆயிரத்து 600 கோடி பயிர் கடனாக 16 லட்சத்து 19 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024 -25 நிதியாண்டில் பயிர் கடன் வழங்க ரூ.16,500 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
2023-24 ஆம் ஆண்டு ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பவர்களுக்கு கடன் வழங்க 2300 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 1,900 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டுக்கு பயிர் கடன் வட்டி மானியத்திற்காக 700 கோடி ரூபாயும் ஆடு, மாடு கோழி மீன் வளர்ப்பவர்களுக்கு வட்டி மானியத்திற்காக 200 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10 வேளாண் விளைப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு..!
புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள் பூங்காக்கள் அமைத்திட 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டி ரோஜா பூங்காவில் புதிய ரக ரோஜாக்களை பயிரிட 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எனவும் தூத்துக்குடி , வேலூர், தர்மபுரி, கரூர் மாவட்டங்களில் 250 ஏக்கர் பரப்பளவில் பேரீட்சை சாகுபடி செய்ய ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் இதற்கு 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரோடு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 8 மஞ்சள் வேகவைக்கும் ஆலைகளும், 5 மஞ்சள் மெருகூட்டும் ஆலைகளும் அமைக்க 2.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2024-2025-ஆம் ஆண்டில் பருத்தி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 14.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பருத்தி விளைச்சல் 5.5 லட்சம் பேரல் அளவுக்கு உயரும்” என தெரிவித்தார்.