18 டன் சமையல் கியாஸ் லாரி கவிழ்ந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்… பள்ளிகளுக்கு விடுமுறை!
கோவை அவினாசி பாலத்தில் சமையல் கியாஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அங்கு மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்து சமையல் எரிவாயு கசிந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் உருவாக்கியுள்ளது.
அதிகாலை 3 மணி அளவில் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மற்றும் பொறியாளர்கள் மீட்புப்பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.
அபாயமிக்க சமையல் எரிவாயு லாரியில் இருந்து தொடர்ந்து கசிந்து வந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்து ஏற்பட்ட 500 மீட்டர் சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” இன்று அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது. LPG (சமயம் எரிவாயு) ஏற்றி வந்த டேங்கர் லாரி அவினாசி பாலத்தில் பக்கவாட்டில் திரும்புகையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரியில் இருந்து கியாஸ் லீக் ஆகியுள்ளது.
இதனை முழுதாக மீட்க, மீட்பு பணிகளுக்காக திருச்சியில் இருந்து மீட்புக்குழுவினர் வந்து கொண்டிருக்கின்றனர். 7கிலோ பிரஷரில் 18 டன் அளவுக்கு LPG கியாஸ் உள்ளே இருக்கிறது. தற்போது இங்குள்ள பொறியாளர்களை கொண்டு தற்காலிகமாக கியாஸ் லீக் நிறுத்தப்பட்டுள்ளது. சுற்று வட்டாரத்திலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த டேங்கரில் உள்ள கியாஸ்களை வெளியேற்ற 2,3 டேங்கர் தேவைப்படுகிறது. இதில் இருந்து வெளியே எவ்வளவு வெளியே சென்றுள்ளது என தெரியவில்லை.” என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.