ஆவின் நிர்வாகம் எடுத்த திடீர் முடிவு.. கண்டனங்களை பதிவு செய்யும் அரசியல் தலைவர்கள்!

ttv dinakaran

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம், தமிழகம் முழுவதும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில், கொழுப்புச்சத்து விகித அடிப்படையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதில் குறிப்பாக 4.5% கொழுப்புச்சத்துடன் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சூழலில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நாளை மறுநாள் முதல் நிறுத்துவதாகவும், அதற்கு பதில் 3.5% கொழுப்புச்சத்துடைய டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. வெளி நிலங்களிள் இருந்து வெண்ணெய், பால் பவுடா் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை செய்யப்படுவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதனால் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை படிப்படியாகக் குறைத்து, டிலைட் ஊதா வகைக்கு மக்களை மாற்றி வருவதாக என்ற தகவல் பரவியது. இதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டங்களை பதிவு செய்து வருகின்றன. அதன்படி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

டிடிவி தினகரன்: 

குறைந்து வரும் பால் கொள்முதல், ஊழல், முறைகேடு என பல புகார்களில் சிக்கித் தவிக்கும் ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை போக்க, 4.5 % கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5% கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பொதுமக்கள் அதிகளவு விரும்பி பருகும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை திடீரென நிறுத்த முடிவு செய்திருக்கும் ஆவின் நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. பொதுமக்கள் விரும்பும் அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளையும் விற்பனை செய்வதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை:

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஊதா நிற பாக்கெட் பாலை விற்பனைசெய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும்.

பாலில் கொழுப்புச் சத்தைக் குறைத்து விட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்து வருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்றுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்:

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி, ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. இவ்வாறு விலை குறைத்த சில மாதங்களுக்குள் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டது.

தற்போது பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தையே நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி ஏழையெளிய மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பச்சை நிற பால் பாக்கெட்டினை மக்கள் விரும்பவில்லை என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்.

தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் அவர்களுக்கு உண்மையிலேயே மக்கள்மீது அக்கறை இருக்குமானால், பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை ரத்து என்ற முடிவினை கைவிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

ஆவின் நிர்வாகம்:

இதனிடையே, ஆவின் நிர்வாகம் அறிக்கையில், பொதுமக்களின் பால் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா நிறம்), சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்), நிறை கொழுப்புப் பால் (ஆரஞ்சு நிறம்) ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.

அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் கடந்த மே மாதம் முதல் சென்னையில் வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘டி’ செறிவூட்டப்பட்ட 3.5 சதவீதம் கொழுப்புச் சத்துள்ள டிலைட் பால் (ஊதா நிற பாக்கெட்) அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்விதத் தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது என விளக்கமளித்திருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்