தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய மின்கசிவு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய், கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த், முக்கிய நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் என பலரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில், விழா மேடையில் விஜய், மற்ற நிர்வாகிகள் நின்று கொண்டிருக்கும் போது மேடை அருகே பலர் கூடியிருந்ததாக தெரிகிறது. அவர்களை ஒதுங்கி நிற்க சொல்லி முதலில், தவெக தலைவர் விஜய் கூறினார். நான் இங்கு தான் 2,3 மணிநேரம் உங்களுடன் இருக்க போகிறேன். அங்கு நிறைய வயர் செல்கிறது. ஒதுங்கி நில்லுங்கள் என கூறினார். அடுத்து, ராஜ்மோகன் மேடையில் இருந்து கூறிவந்தார். அப்பக்கம் மின் வயர் மற்றும் ஏசி வயர் செல்வதாக கூறி வந்தார். பிறகு திடீரென விஜய் உட்பட மேடையில் இருந்த நபர்கள் அருகே அந்த இடத்திற்கு சென்றனர்.
இதனால் அங்கு சிறுது பரபரப்பான சூழல் நிலவியது. இதுகுறித்து தனியார் ஊடகங்களில் வெளியான செய்தியின் படி மேடை அருகே சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது உடனடியாக அணைக்கப்பட்டதாகவும் அதனை காணவே விஜய் மேடையில் இருந்து இறங்கி சென்றார் என்றும் கூறப்பட்டது. இதனால் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.