#Breaking:அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எம்எல்ஏ பரந்தாமன் கோரிக்கை..!
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ,முன்னாள்வீட்டுவசதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ பரந்தாமன் கோரிக்கை வைத்துள்ளார்.
புளியந்தோப்பு கேபி பூங்கா குடியிருப்பு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.இது தொடர்பாக,எழும்பூர் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் பரந்தாமன் தனது உரையில், “புளியந்தோப்பு குடிசைமாற்று வாரியம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என்பது ஊடகங்களில் செய்தியாக வெளியாகி இருக்கிறது.
எனவே,இதனை கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.இந்த கட்டடம் 2018ல் தொடங்கப்பட்டு 2019ல் முடிக்கப்பட்டது.தொட்டால் சிணுங்கி பார்த்திருக்கிறோம், ஆனால் தொட்டாலே விழுகின்ற சிமெண்டை கண்டு பிடித்த ஆட்சி கடந்த அதிமுக ஆட்சி.
தொட்டால் விழும் கட்டடத்தை அதிமுக அரசு கட்டியுள்ளது.இந்த கட்டடம் முறைகேடாக கட்டப்பட்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் உள்ளது தெளிவாக தெரிகிறது.10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி கட்டிமுடித்த அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.மேலும்,அப்போதைக்கு வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிருமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்”,என்று கூறி கவன ஈர்ப்பு தீர்மானத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார்.
அவரைதொடர்ந்து,காங்கிரஸ் உறுப்பினர் செல்வ பெருந்தகையும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் கூறியதாவது:” புளியந்தோப்பு குடியிருப்பை ஆய்வு செய்ய ஐஐடி குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்; அவர்கள் அனுப்பும் அறிக்கையின் படி தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்”,என்று தெரிவித்தார்.