டங்ஸ்டன் சுரங்கம் : அனல் பறந்த விவாதம்! ஆவேசமான இபிஎஸ் – மு.க.ஸ்டாலின்!
எதிர்கட்சி தலைவர் இபிஎஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடுமையான வாதங்களுக்கு இடையே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
சென்னை : மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானித்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இபிஎஸ் குற்றசாட்டு :
அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , ஆவேசமாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார். அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் உங்கள் கட்சி எம்பிக்கள் இருந்தார்கள். அவர்கள் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்க வேண்டும். சுரங்கம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் போராட்டம் நடத்தியதன் பிறகு தான், முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். ஒப்பந்தம் கோரிய போதே, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தால், இன்று அதனை தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால், அதனை தமிழக அரசு ஆரம்பத்திலேயே செய்யவில்லை. ” என இபிஎஸ் கூறினார்.
துரைமுருகன் பதில் :
அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், ” நீங்களும் முதலமைச்சராக இருந்தவர் தான். அனைத்து விவரங்களையும் தீர்மானத்தில் கொண்டுவர முடியாது. அப்படி வேண்டுமென்றால் நீங்கள் தனித்தீர்மானம் போட வேண்டும். நீங்க முதலமைச்சராக இருக்கும் போது எத்தனையோ கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதி இருக்கிறீர்கள். அதில், ஒன்றாவது எங்களுக்கு கொடுத்து உள்ளீர்களா? மாநில அரசு மத்திய அரசுக்கு எழுதிய கடித்தை எப்படி உங்களுக்கு அனுப்ப முடியும்? ” என விளக்கம் கொடுத்தார்.
முதலமைச்சர் பதில் :
அதனை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ” எங்களுடைய எம்பிக்க நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து இருக்கிறார்கள். மக்கள் போராட்டம் மதுரையில் நடைபெற்றபோது, அந்தப் போராட்டத்தில் மாவட்ட அமைச்சர் மூர்த்தி அவர்கள் நேரடியாக சென்று போராட்டத்தில் தன்மையை அறிந்து கொண்டு, போராட்டத்தை நிறுத்துங்கள், உங்களுக்கு ஆதரவாக இந்த அரசு இருக்கும் எனக் கூறி, முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார் என்பதை விளக்கி, தனி தீர்மானத்தை கொண்டு வரப் போகிறோம் என்று கூறினார். அதன்பிறகு போராட்டம் அப்போது கைவிடப்பட்டது.
நாடாளுமன்றம் கூடியதுமே அவை கலைந்து தான் செல்கிறதே தவிர, இன்னும் அங்கு கூட்டம் நடைபெற்றதாக செய்தி வரவில்லை. கிடைக்கும் சிறிய நேரத்தையும் பயன்படுத்தி, சுரங்கம் அமைப்பது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம், எதிர்ப்பு குரல் கொடுக்க தான் செய்கிறோம். ஆனால் மெஜாரிட்டி அவர்கள் (பாஜக) இருக்கிறார்கள். அதனால், சட்டம் நிறைவேறித்தான் ஆகும். நாங்கள் குரல் கொடுத்தால் மட்டும் சட்டத்தை நிறைவேற்றாமல் விட்டு விடுவார்களா? எந்த விதத்திலும் திமுக ஆட்சி அலட்சியமாக இருந்தது இல்லை.” என மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தனது கருத்துக்களை தெரிவித்தார்.
இபிஎஸ் ஆவேசம் :
அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய இபிஎஸ், ” என்னங்க நீங்களே தீர்மானம் கொண்டு வருவீங்க, நீங்களே பேசிகிட்டு இருக்கீங்க, அப்புறம் எதுக்கு எங்கள வர சொன்னீங்க? அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால் ஆரம்ப காலகட்டத்திலேயே இந்த சுரங்க திட்டத்தை தடுத்திருக்கலாம். அதைத்தான் இப்போது வரை நான் பேசி இருக்கிறேன்.” என ஆவேசமாக தனது கருத்தை முன்வைத்தார்.
நான் முதலமைச்சராக இருக்கும் வரை..
பின்பு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” மத்திய அரசு என்ன செய்தாலும் சரி, இந்த அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி தராது. அதற்கு வாய்ப்பே இல்லை. இந்த விவகாரத்தில் திட்டவட்டமாக இருக்கிறோம். நான் முதலமைச்சராக இருக்கும் வரை, ஒன்றிய அரசு இத்திட்டத்தை கொண்டு வர முடியாது.” என மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
இந்த வாதங்களை அடுத்து மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தனித்தீர்மானமானது அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம் செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மேலும், நாளை காலை வரை தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.