ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்.. இல்லைன்னா வீட்டை முற்றுகையிடுவோம் – பாஜக மகளிரணி
திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மகளிரணியினர் புகார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசிய நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ஆ.ராசா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மகளிரணியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்துக்களை குறித்து அவதூறாகவும், பெண்களை இழிவுபடுத்தியும் பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று தமிழக பாஜக மகளிரணியினர் புகார் அளித்தனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில மகளிரணி பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன், திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்து மதத்தை எது வேண்டுமானாலும் பேசலாம் என்று தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் ஆ.ராசா பேசி வருகிறார். அது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயமாக தமிழக பாஜக மகளிரணி பார்க்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆ.ராசா அவர்கள் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் பாஜக மகளிரணி ஆ.ராசா அவர்கள் வீட்டை நிச்சயம் முற்றுகையிடும் என தெரிவித்தார்.
இதனிடையே, சமீபத்தில் சென்னையில் நடந்த திராவிடர் கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி, உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஆ.ராசா இப்படி பேசியதற்கு, தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்காதது குறித்து வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது தமிழக பாஜக மகளிரணி புகார் அளித்துள்ளது.