தொழில்நுட்ப புரட்சியை குற்றம் என கூறி சிறைக்கு அனுப்பிய விசித்திரம் நாட்டில் நடந்துள்ளது!
டெல்லியில் இருந்து திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆ.ராசா எழுதியுள்ள கடிதத்தில், நிலைகொள்ளாத இந்த நடுநிசியில், தலைநகரின் கடுங்குளிரில் தங்கள் வார்த்தைகளின் ஒலிக்காக தனது செவிகள் உண்ணா நோன்பிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல்களை எதிர்கொண்டு இந்த அலைவரிசைப் பயணத்தில் தான் கரைந்துவிடாமல் இருக்க பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய் கருணாநிதி என்று குறிப்பிட்டுள்ள ஆ.ராசா, 2ஜி தீர்ப்பை நன்றியுணர்ச்சியோடு கருணாநிதியின் காலடியில் வைத்து வணங்குவதாகக் கூறியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசினை வீழ்த்திட நடத்தப்பட்ட சதியில் அலைவரிசை அகப்பட்டுக் கொண்டதை அரசே அறிய முடியாமல் போனதுதான் அந்த ஆட்சியின் அவலம் என்று ஆ.ராசா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். உளவுத்துறை தன் கையிலிருந்தும் இதை உணர முடியாத அரசின் நிலைதடுமாற்றத்தில், தறிகெட்டு ஓடிய சில நிறுவனங்களுக்கு பின்னணியில், ஒரு மாநிலக் கட்சியான திமுகவின் இந்திய அரசியல் ஆளுமையை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று முடிவெடுத்த சில ஆதிக்க சக்திகளும் இருந்ததாக ஆ.ராசா கூறியுள்ளார்.
source: dinasuvadu.com