இரவோடு இரவாக ஊழியர்கள் கைது.! உயர்நீதிமன்றம் சென்ற சிஐடியு தொழிற்சங்கம்.!
நேற்று நள்ளிரவு போராட்டத்தில் ஈடுப்பட்ட சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 30 நாட்களுக்கு மேலாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தீர்வு காணும் நோக்கில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பெயரில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் சில முடிவுகள் எட்டப்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் மட்டும் போராட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், சிஐடியு தொழிற்சங்கத்தினர் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனக் கூறி தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான முத்துக்குமார், எல்லன், பாலாஜி, சிவனேசன், ஆசிக், மோகன்ராஜ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோரை அவர்களின் வீட்டிற்கு சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்ற சுங்குவார்சத்திரத்தில் இன்று சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். இதற்கிடையே நேற்று நள்ளிரவு சாம்சங் ஊழியர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சாம்சங் ஊழியர்களை கைது செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை சிஐடியு தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து இன்று சிஐடியு தலைவர் சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” நேற்று நள்ளிரவு காவல்த்துறை மிக மோசமான அளவில் அட்டூழியம் செய்துள்ளது. இந்த இடம் தனியாரிடம் தான் உள்ளது இங்கு போராடும் எங்களை கைது செய்வதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இவ்வளவு மோசமாக போலீசார் நடந்து கொள்வது ஆட்சிக்கு நல்லதல்ல. போலீஸ் அமைச்சராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட வேண்டும்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது தான் இதுபோல பொய் வழக்குகள் போடப்பட்டு , அரசுக்கு எதிராக போராடுபவர்கள் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதே போல தான் நடைபெறுகிறது. போராட்டத்தில் ஈடுபடும் பெரும்பான்மை தொழிலாளர்களை சிறுபான்மை தொழிலாளர் பக்கம் சாய்ப்பதற்கு மிரட்டல்களை விடுக்கின்றனர். இந்த அச்சுறுத்தல்களில் போலீசாரே ஈடுபடுகின்றனர்.
தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பதில் சுணக்கம் காட்டுவது தான் இங்கு பிரச்சனையே. எங்களது பிரச்சனைகள் அமைச்சருக்கு புரிந்ததா அல்லது புரியாத மாதிரி இருக்கிறாரா என்று தெரியவில்லை. எங்கள் தொழிற்சங்கத்தை நிர்வாகம் ஏற்க வேண்டும். எங்கள் ஊழியர்களின் கோரிக்கையை சங்கம் பேசும். அதனை அரசு அவர்களை (நிர்வாகத்தை) ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும்.
நேற்று இரவு தொழிலாளர்களை அச்சுறுத்தி உள்ளார்கள். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நில உரிமையாளர் எங்கள் போராட்டத்திற்கு எதுவும் சொல்லவில்லை. மாறாக எங்கள் போரட்ட களத்தில் தீவிரவாதிகள் புகுந்து விட்டார்கள் சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள் என பொய் தகவல்களை காவல்துறையினர் பரப்பி வருகின்றனர் என்று சிஐடியு தலைவர் சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.